அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: முதல்வர் 

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: முதல்வர் 

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் என்று உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் பெருமையைவிட, அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கமாகும். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்காலத்தில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் உள்ளான நமது மாநிலத்திற்கு, கடந்த 10 மாதகாலமாகத்தான் உதயசூரியன் வெளிச்சத்தால் விடியல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துபை மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். 

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கானப் பயணம். கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் நம் செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததையும், தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதையும், கருணாநிதியின் தொண்டர்களான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிந்திருப்பீர்கள். 

இன்று (மார்ச் 27) மாலை அபுதாபிக்கு சாலைவழிப் பயணம். நாளை அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பு, கேரளத்தைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் - வர்த்தக நிறுவனமான லூலு நிறுவனத்தாரைச் சந்தித்து, அவர்களுடன் மதிய உணவு விருந்து. அமீரகப் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் லூலு குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி.  தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளை செய்வதில் ஆர்வமாக உள்ள அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதனைத் தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள தமிழ்ச் சொந்தங்களை சந்தித்து மகிழ்கிறேன். 

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் திமுக அரசு முனைப்புடன் உள்ளது. அமீரகப் பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது. 

கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன். திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் உங்களை சந்திக்கத் தாய்த் தமிழ்நாடு வருகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com