6 வீரர், வீராங்கனைகள் பிரேசில் செல்ல தமிழக அரசு நிதியுதவி

பிரேசிலில் நடைபெறவுள்ள கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்
6 வீரர், வீராங்கனைகள் பிரேசில் செல்ல தமிழக அரசு நிதியுதவி

பிரேசிலில் நடைபெறவுள்ள கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் 15- ந்தேதி வரை 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள்- சமீஹா பர்வீன் (19) (நீளம் தாண்டுதல்), ஆர்.சினேகா(25) (நீச்சல் -50மீ/100மீ - பின்னோக்கி நீந்துதல்),ஜெர்லின் அனிகா(18) (இறகுப்பந்து - தனிநபர்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(19) (நீளம்தாண்டுதல் 100 மீட்டர்), ஆர்.சுதன் (24) (மும்முனை தாண்டுதல்), பிரித்வி சேகர்(29) (டென்னிஸ்- தனிநபர்) ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் 22/03/2022 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரேசில் செல்ல அரசின் சார்பில் விமானக்கட்டணம் மற்றும் உதவிகள் செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைவருக்கும் விமானக்கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் வீரர்–வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பும்வரையில், தகவல் தொடர்பு கொள்ளவும் வசதியாக வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com