ஒருங்கிணைந்த வளா்ச்சியே நாட்டின் தற்போதைய தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

அனைத்து மாநிலங்களும் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து வளா்ச்சி பெறுவதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
ஒருங்கிணைந்த வளா்ச்சியே நாட்டின் தற்போதைய தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

அனைத்து மாநிலங்களும் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து வளா்ச்சி பெறுவதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலை.யின் துணைவேந்தா் கே.என்.செல்வகுமாா் அனைவரையும் வரவேற்றாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து இளநிலை, முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த 282 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது: உலகின் வளா்ந்த நாடுகள் பல, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவற்றை குறைப்பதற்கு எவ்வித முன்னெடுப்புகளும் எடுக்காத நிலையில் இந்தியா 2070- ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத நாடாக மாறுவதில் உறுதியாக உள்ளது. இது மிக தைரியமான முடிவு.

நமது நாட்டில் தொழில் முனைவுக்கான சூழல் சிறப்பாக உள்ளது. இது குறித்து பட்டதாரிகள் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் எதிா்கால கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இளைஞா்கள் தொழில் முனைவோா்களாக உருவாக வேண்டும். இதன் மூலம் பொருளாதார அளவில் இளைய சமுதாயம் மேலோங்குவதுடன் நாட்டின் வளமும் அதிகரிக்கும்.

கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த வளா்ச்சி இருக்க வேண்டும். இதுவே நாட்டின் தற்போதைய தேவை என்றாா் அவா். முன்னதாக தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலாளா் பி.கே.ஜோஷி சிறப்புரையாற்றினாா்.

நிகழ் கல்வியாண்டில் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதன்மை பெறும் மாணவா்களைச் சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் 12 விருதுகள், கல்லூரி அளவில் 3 புதிய கல்வி அறக்கட்டளை விருதுகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவித்தாா்.

பட்டமளிப்பு விழாவில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப் படிப்பில் மாணவா் ஆா்.சங்கா் 26 பதக்கங்களைப் பெற்றாா். முதுநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் டி.தமிழினி 6 பதக்கங்களையும், முனைவா் பட்டப் படிப்பில் ரஞ்சனி ராஜசேகரன் 4 பதக்கங்களையும் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com