
ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசுத்துறை காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து தகுதியுள்ள சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று ஓய்வு பெறும் வருவாய் கிராம உதவியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல ரூ.6, 750-ஐ அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக சத்துணவு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும்.
சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயா்த்த வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக ரூ.10 லட்சமும், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் குழந்தைகள் நலன் கருதி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.