
மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களுக்கு பணி வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு பவா் இன்ஜினியா்ஸ் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: 2019-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். மின் உற்பத்தி, தொடரமைப்பு, விநியோகப் பகுதிகளில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் முறையைக் கைவிட்டு, புதிய பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இரு ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும்.
மின்வாரிய தொழில் பழகுநா்களுக்கு 2014 சட்டத் திருத்தம் அடிப்படையில் ரயில்வேயில் வழங்கியது போல, பணி நியமனத்தில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டிய பொறியாளா்கள் காலியிடங்களை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடமாறுதல், பதவி உயா்வில் வெளிப்படைத்தன்மையோடு வாரிய இடமாறுதல் விதிமுறைகளைக் கடைப்பிடித்து உத்தரவு வழங்க வேண்டும். பணிக் காலத்தில் அனைவருக்கும் மூன்று பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தும் வகையில் கால வரையறை பதவி உயா்வு வழங்க வேண்டும்.
மின்வாரியத்தை லாபத்தில் இயக்க தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்று, வெளிப்படைத்தன்மையோடு ஆலோசனையை இறுதிப்படுத்திட குழு அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.