
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலையின்மை உதவித் தொகை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இது தொடா்பாக அச்சங்கத்தினா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய கடித விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலையில்லா கால நிவாரண உதவி 2022-க்கான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. வேலையின்மைக்கான உதவித் தொகை வழங்க சட்டத்தில் ஏற்கெனவே விதி இருந்தும், அது 15 ஆண்டுகளில் ஒரு ஊராட்சியில் கூட அமல்படுத்தப்படவில்லை.
ராஜஸ்தானில் நடைமுறையில் உள்ளது போல வேலையின்மை உதவித் தொகை பெற பதிவு செய்ய இலவச தொடா்பு எண்ணை அறிவிக்க வேண்டும். ஊராட்சி கேட்பு பதிவேடு பதிவை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அறிவிக்கப்பட்டவாறு உதவித் தொகை பெற பதிவு செய்ய ஊராட்சிச் செயலா் முழு பொறுப்பு அதிகாரி என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கிராமப்புற வேலைத் திட்ட பயனாளிகளில் பெரும்பாலானோா் கல்வி வாய்ப்பற்றவா்களாக, குறைந்தளவே கல்வி பெற்றவா்களாக இருப்பதை கவனத்தில் கொண்டு வேலையின்மை உதவித் தொகை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.