
தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியா்கள் 2,760 பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடித விவரம்:
தமிழகத்தில் 1990 முதல் 2019-ஆம் கல்வியாண்டு வரையான பல்வேறு காலகட்டங்களில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியா்கள், 2,460 முதுநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.
இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் இந்த ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதையேற்று 2,760 ஆசிரியா்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.