அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: ஜூன் முதல் வாரம் பதவியேற்பு?

திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனுமான  உதயநிதி ஸ்டாலின் வரும் ஜூனில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வரும்  ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக சென்னையில் திருவல்லிக்கேணி -  சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, துறை ஒதுக்கீடு செய்வது குறித்து தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், ஏற்கெனவே முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் அமைச்சர்களாக இருப்பதால், உதயநிதியையும் அமைச்சராக்குவதில் எந்த இடையூறும் இருக்காது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் முதல் வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்பார் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது என்றும் இதுகுறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் விரைவில் அவர் அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com