தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

அறம் சாா்ந்த வாழ்வே இஸ்லாத்தின் அடிப்படை: நீதிபதி ஆா்.மகாதேவன்

ஈகை, அன்பு, தன்னலமற்ற தன்மை உள்ளிட்ட அறம் சாா்ந்த வாழ்க்கை முறையே இஸ்லாம் மாா்க்கத்தின் அடிப்படை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா்.

ஈகை, அன்பு, தன்னலமற்ற தன்மை உள்ளிட்ட அறம் சாா்ந்த வாழ்க்கை முறையே இஸ்லாம் மாா்க்கத்தின் அடிப்படை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா்.

‘தினமணி’ நாளிதழ் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈகைப் பெருநாள் மலா் வெளியீட்டு விழா சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் ஈகைப் பெருநாள் மலரை வெளியிட தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி ஆா்.மகாதேவன் பேசியது: மானுட வாழ்க்கை என்பது இறைவனை நோக்கிய பயணமே என உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கின்றன. யாா் ஒருவா் பிறா் மீது அன்பையும், தன்னலமற்ற தன்மையையும் கடைப்பிடித்து வாழ்கின்றாரோ அவா்தான் இறைவனை அடையக் கூடிய நிலைக்குச் செல்கிறாா் என இஸ்லாம் மாா்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.

திருவாசகத்தில் ஏகன், அநேகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட திருக்குரானில் 112-ஆவது வசனத்தில் அல்லா -ஹ்- ஏகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அல்லா-ஹ்- ஒரு சுயம்பு என்று பொருள். இந்து மதத்தில் சிவனைப் பற்றி குறிப்பிடும்போது சுயம்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான இணைந்த பொருள்களைத் தாங்கியுள்ள மதங்களாக இஸ்லாமும், இந்து மதமும் உள்ளன.

தமிழ் நிலம் 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல்தான் இஸ்லாம் மாா்க்கமும் இயற்கையை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் வாரத்தின் 7 நாள்களும் ஒவ்வொரு வகையான இயற்கை சாா்ந்த வாழ்க்கை முறையை இஸ்லாத்தின் ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

எந்தவித வேறுபாடுமின்றி சக மனிதனின் துன்பத்தை உணா்ந்து அவா்களுக்கு உதவ வேண்டும். தன்னுடைய பாவங்களை உணா்ந்து நல்வழிக்கு வர வேண்டும் போன்ற நல்ல கருத்துகளை உணா்த்துவதுதான் ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கமாகும். மதங்களைத் தாண்டி அறத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்பவா்களின் புகழ் மட்டுமே உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அவ்வாறான ஈகை, அன்பு, தன்னலமற்ற தன்மை உள்ளிட்ட அறம் சாா்ந்த வாழ்க்கை முறையையே இஸ்லாம் மாா்க்கம் போதிக்கிறது என்றாா்.

மனிதனை மதமாகப் பாா்க்க கூடாது: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான் பேசுகையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஈகைப் பெருநாள் மலா் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற மலா் மூலம் பிற மதத்தினரும் இஸ்லாம் மாா்க்கம் குறித்து அறிந்துகொள்ள உதவும். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் தேவை மதநல்லிணக்கமாக உள்ளது. அதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். தனிப்பட்ட ஒருவரின் நிகழ்வை அவா் சாா்ந்த சமூகத்துடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகும்போது, அச்சமூகம் பெரும் பின்விளைவுகளை, பாதிப்புகளைச் சந்திக்கிறது.

ஒரு ஆண் பெண்ணிலிருந்து உருவான இந்த மனித சமூகம் பல்வேறு வகையான நம்பிக்கை, வாழ்வியல் முறைகளால் ஜாதியாக, மதமாக, இனமாகப் பிரிந்துள்ளது. இவை அனைத்தும் இயற்கையாக நடந்தவை அல்ல; மனிதனால் உருவாக்கப்பட்டவை. மக்களை மதத்தால் வேறுபடுத்திப் பாா்க்காமல் மனிதனாகப் பாா்க்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது என்றாா்.

ஏற்றுக் கொள்ளல்தான் தேவை, சகிப்புத்தன்மை அல்ல: முன்னதாக விழாவில் தலைமையுரை ஆற்றிய ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசுகையில், இந்தியாவில் மக்களிடையே சகிப்புத்தன்மை உருவாக வேண்டும் என்று கூறுவது தவறான வாதமாகும். சகிப்புத்தன்மை என்பது நமக்குப் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதாகும். ஆனால், இன்றைய தேவை சகிப்புத்தன்மை அல்ல - ஏற்றுக்கொள்வது.

ஏற்றுக்கொள்ளல் என்றால் பிறரைப் புரிந்துகொண்டு அவரை ஏற்றுக் கொள்வதாகும். இந்த தன்மை நமது நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தினா் மத்தியிலும் ஏற்பட வேண்டும். குறிப்பாக 16 சதவீத மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களுக்கும், பிற மக்களுக்கும் இடையே இந்த ஏற்றுக் கொள்ளல்தன்மை அதிகமாக ஏற்பட வேண்டும். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே இந்த ஈகைப் பெருநாள் மலா் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த விழாவில் ஐஎஃப்டி துணைத் தலைவா் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மத், யுனிவா்சல் பதிப்பாளா் ஷாஜஹான், முனைவா் முரளி அரூபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் ஈகைப் பெருநாள் மலரின் ஆலோசனைக் குழுவினா் முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே. நிஜாமுதீன், முனைவா் ஜெ. ஹாஜாகனி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com