மதுரை டி.கல்லுப்பட்டி கோயில் திருவிழாவில் மதுபோதையில் இளைஞர்கள் ரகளை

மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.
மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.

மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் புது மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி சக்தி மாலை அணிவித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 24-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு அன்றிரவு பொங்கல் சாட்டுதல் நடைபெற்றது. 25 ஆம் தேதி காப்பு கட்டுதல், 29-ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து., திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று, டி.கல்லுப்பட்டி வழியாக தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள புது மாரியம்மன் கோயில் முன்பு டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, சத்திரப்பட்டி, காரைக்கேணி, அம்மாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பல வேடங்கள் அணிந்து வந்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் தேவலோகத்தில் உள்ள அனைத்து கடவுள்கள் மற்றும் அரக்கர்கள், பெண் வேடங்கள், சித்தர்கள், பூதங்கள் மட்டுமின்றி நவீன காலத்தில் திரைகதாபாத்திரங்களான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்., ஸ்பார்ட்டன்ஸ் 300 பருத்தி வீரர்கள்., மார்ஷ்மல்லோ மற்றும் முள்படுக்கை, ஏலியன், தாவரங்கள், ஜோக்கர், காட்டுவாசிகள் உள்ளிட்ட பல்வேறு வினோத வேடங்கள் அணிந்து கோயில் முன்பு ஒன்று கூடி ஒவ்வொருவரும் தங்களுக்கு என வாகனங்களை ஏற்படுத்திக் கொண்டு அதில் அமர்ந்து கொண்டனர்.

இவர்களுக்கு முன்னால் மாட்டுவண்டியில் புதுமாப்பிள்ளை, புதுமணப் பெண் வேடமணிந்து சீர்வரிசையுடன் டி.கல்லுப்பட்டி வழியாக தென்காசி செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது கோயில் முன்பு தொடங்கப்பட்டு டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கோயிலை வந்தடையும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த  திருவிழாவில் ஊர்வலத்தின்போது மது போதையிலும் கஞ்சா போதையிலும் வந்திருந்த இளைஞர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அவர்களை ஊர் பெரியவர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கண்டித்தனர். அப்போது ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த குட்டி அருவா ஒன்றை எடுத்து கூட்டத்தில் தன்னை காயப்படுத்திய நபர்களை நோக்கி வீசத் தொடங்கினார். இதனால் சுற்றி இருந்த மக்கள், பக்தர்கள் அனைவரும் பதட்டம் அடைந்தனர். கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து., போலீசாரை கண்ட அந்த இளைஞர், கூட்டத்திலிருந்து உடனடியாக தப்பிச் சென்றார்., அதன்பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்திற்குள் தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் ஊர்வலம் செல்லும் பாதைக்கு வரும்பொழுது பாதுகாப்பில் இருந்த டி.கல்லுப்பட்டி போலீசார், அந்த இளைஞர் கூட்டத்தை சுற்றிவளைத்துப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த கலவரத்திற்கு காரணம் திருவிழா நடைபெறும் இடத்திற்கு சில மீட்டர் தொலைவில் அப்பகுதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் திறந்து வைத்திருப்பதே என்று அப்பகுதியில் இருந்த மக்களும்., சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com