தமிழ், ஆங்கில எழுத்துகளை தலைகீழாக எழுதி அசத்தும் மாணவி!

தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை பொருள் மாறாமல் அப்படியே தலைகீழாக வேகமாக எழுதுகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி கௌசல்யா.
மாணவி கௌசல்யா.
மாணவி கௌசல்யா.
Updated on
1 min read

தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை பொருள் மாறாமல் அப்படியே தலைகீழாக(மிரர் ரைட்டிங்) வேகமாக எழுதுகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி கௌசல்யா.

தஞ்சாவூர் வண்டிக்காரத்தெரு கோரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கதிர்வேல். இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு நந்தினி, கௌசல்யா, விஷால் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கெளசல்யா (17) அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை, பொருள் மாறாமல் அப்படியே தலைகீழாக வேகமாக எழுதுகிறார். இதனை கண்ணாடியில் பார்க்கும் போது தலைகீழாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அப்படியே பொருள் மாறாமல் தெரிகிறது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், அக்கம் பக்கத்தினர், மாணவியை வெகுவாகப் பாராட்டி வருகி்ன்றனர்.

இது குறித்து மாணவி கெளசல்யா கூறுகையில்,  நான் 6ம் வகுப்பு படிக்கும் போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் எழுத்துகள் தலைகீழாக எழுதி இருக்கும், அதை பார்க்கும்போது ஏன் மற்ற வார்த்தைகளை அப்படி எழுதக் கூடாது என தோன்றியது. இதனையடுத்து அதற்கான முயற்சியில் இறங்கினேன். இதற்காக வீட்டில் நேரம் இருக்கும்போது, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை ஒவ்வொன்றாக தலைகீழாக எழுதிப் பார்த்து கண்ணாடியில் எவ்வாறு தெரிகிறது என்று பார்ப்பேன். அப்படியே தொடர்ந்து எழுத கற்றுக்கொண்டேன்.

தற்போது, ஒரு ஏ4 பக்க அளவிலான கட்டுரையை 15 நிமிடங்களில் எழுதி முடித்து விடும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். எல்லோரும் இடதுபுறத்தில் இருந்து, வலது புறம் எழுதுவார்கள், அதனை கண்ணாடியில் பார்க்கும் போது தலைகீழாக தெரியும். ஆனால் நான் வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதுவேன், அதனை கண்ணாடியில் அல்லது, பேப்பரின் பின் பக்கம் ஒளி வீசி பார்க்கும் போது நேராக தெரியும். 

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆனால் இதை யாரிடம் சொல்லி, வெளி உலகத்திற்கு எனது திறமையை கொண்டு செல்வது என தெரியாமல் இருந்துவிட்டேன். பிளஸ் 2 படித்து முடித்து டாக்டராக அல்லது ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு என்று தெரிவித்தார். 

மாணவியின் தாய் கூறுகையில், எங்களது மகள் கெளசல்யா ஏதோ கிறுக்கி கொண்டு படிக்காமல் நேரத்தை வீணாக்கிறார் என்று கண்டிப்போம், ஆனால் மற்றவர்கள் அவளை பாராட்டும் போதுதான், அவளின் திறமை எங்களுக்கே தெரியவந்தது என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com