ஓராண்டில் திமுக ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும்
ஓராண்டில் திமுக ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவர்களையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும்.  இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியைச் சந்தித்துள்ளது என்றார்.  இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com