17 மாதங்களில் ரூ.300 உயர்வு: என்னதான் செய்வார்கள் ஏழைகள்?

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று மீண்டும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,015-ஐ எட்டிவிட்டது.
17 மாதங்களில் ரூ.300 உயர்வு: என்னதான் செய்வார்கள் ஏழைகள்?
17 மாதங்களில் ரூ.300 உயர்வு: என்னதான் செய்வார்கள் ஏழைகள்?

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று மீண்டும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,015-ஐ எட்டிவிட்டது.

ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்குத் தேவைப்படும் சமையல் எரிவாயு உருளை விலையானது 2021ஆம் ஆண்டு 735 ரூபாயிலிருந்து, வெறும் 17 மாதங்களில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்திருப்பது ஏழை மக்களுக்கு சொல்லொணாத் துயரமாகியுள்ளது. 

இந்தக் காலக்கட்டத்தில் சமையல் எரிவாயு உருளையானது 300 ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றால், இந்த அளவுக்கு ஏழை மக்களின் வருவாய் அதிகரித்திருக்குமா? இதனை அவர்கள் எப்படி ஈடுசெய்வார்கள்? இல்லை இதன் விலை மட்டும்தான் உயர்ந்திருக்கிறதா? என்ற எண்ணற்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. ஆனால் இவையெல்லாம் விடைகாணா கேள்விகளாகவே தொக்கி நிற்கின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 710 ரூபாயாக இருந்த எரிவாயு உருளை விலை பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ரூ.735 ஆக அதிகரித்தது. மாதத்தில் நாள்கள் குறைவாக இருக்கும் பிப்ரவரி மாதத்திலேயே மூன்று முறை எரிவாயு உருளை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 17 மாதங்களில் மே 1ஆம் தேதி நிலவரப்படி ரூ.1016 ஆக அதிகரித்துள்ளது.  இது சென்னை விலை நிலவரம்.

ஓா் ஆண்டில் வீட்டு உபயோகத்துக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 12 சிலிண்டா்கள் வாங்கிய பின்னா், புதிதாக வாங்கப்படும் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி சிலிண்டா் விலை மாற்றியமைக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல்கள் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தான் மீண்டும் வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை உயர்த்தப்பட்டது. அப்போது சிலிண்டர் விலை ரூ.50  அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 7ஆம் தேதி மீண்டும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 14.2 கிலோ எடைகொண்ட மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை சென்னையில் ரூ.1015.50, தில்லியில் ரூ.999.50-ஆக அதிகரித்துள்ளது. 

மானியம் வழங்காத அரசு

மானிய விலையில் சிலிண்டா் வாங்கும் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மானியத்தை செலுத்துவது வழக்கம். ஆனால், தற்போது பல நகரங்களில் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு வழங்குவதில்லை. இதனால் உஜ்வலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்கள் உள்பட அனைத்து வாடிக்கையாளா்களும் சந்தை விலையில் அல்லது மானியமில்லா சிலிண்டா் விலைக்கு நிகரான விலையில்தான் மானிய சிலிண்டா்களை வாங்குகின்றனா்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலைதான் இப்படி என்றால், வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை இதை விட மோசம்.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த ஞாயிற்றுக்கிழமையே உயர்த்தப்பட்டுவிட்டது. வர்த்தக சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.102.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து மூன்றாவது மாதமாக அதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி ரூ.102.50 உயா்த்தப்பட்டதன் காரணமாக 19 கிலோ வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.2,355.50-ஆக உயா்ந்துள்ளது. 

முன்னதாக, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ரூ.105 அளவுக்கும், ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ.250 அளவுக்கும் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டது.

வா்த்தக சிலிண்டரின் விலை உயா்த்தப்பட்டபோதிலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் (14.2 கிலோ) விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால் ஏழை மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மே 7ஆம் தேதி திடீரென சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com