இந்தி திணிப்பை எதிர்த்து  ஜிப்மர் முன் திமுக முற்றுகை:  4 எம்எல்ஏக்கள் உள்பட 200 பேர் கைது

இந்தி திணிப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4  எம்எல்ஏக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்


புதுச்சேரி: இந்தி திணிப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4  எம்எல்ஏக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, ஜிப்மர் எதிரே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்பி. சிவக்குமார், எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.சிவா எம்எல்ஏ பேசியதாவது:
புதுச்சேரியில் அடக்கு முறைகளை கையாண்டு வரும் ஜிப்மர், அடுத்த கட்டமாக இந்தி மொழியை திணிக்கத் தொடங்கியுள்ளது. ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அலுவலக மொழி 1976 ஆம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற குழு அளித்துள்ள பரிந்துரையின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது வன்மையாக கண்டிக்கதக்கது. தரமான சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்று இருந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும்.

எனவே, இந்தி திணிப்பை கைவிட வேண்டும், புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்படாமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற ஆர். சிவா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள், 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com