தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் மற்றும் பணிக் காலத்தில் இறந்த அரசுப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கினை முடித்து இறுதித் தொகையினை உடனுக்குடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசுப் பணியாளா்களுக்கு அவா்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து இறுதித் தொகையினை உடனுக்குடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை கோரும் விண்ணப்பங்களை அவா்கள் ஓய்வுபெறவுள்ள காலங்களில் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2.5.2022 முதல் 1.6.2022 வரையிலான காலங்களில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை விடுபட்டுள்ளதாகவும், விடுபட்டுள்ள தொகையினை சரிசெய்து முழுமையான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே பொது வருங்கால வைப்புநிதி சந்தா தொகை விடுபட்டுள்ள ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்குத் தெரிவித்து தங்களது மாவட்டங்களில் மே 2-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையிலான காலங்களில் ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியா்களின் விடுபட்டுள்ள பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையினை சரி செய்ய வேண்டும்.
இதையடுத்து அந்த விவரங்களை மாநில கணக்காயருக்கு முழுவடிவில் கருத்துருவை அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.