திட்டமிட்டபடி குரூப் 2 தோ்வு: தோ்வாணையத் தலைவா் அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை (மே 21) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகள் நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
திட்டமிட்டபடி குரூப் 2 தோ்வு: தோ்வாணையத் தலைவா் அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை (மே 21) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகள் நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

குரூப் 2, 2ஏ தொகுதியில் அடங்கியுள்ள காலிப் பணியிடங்களுக்கு வருகிற 21-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடத்தப்படும். தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட போது, நோ்முகத் தோ்வைக் கொண்ட காலிப் பணியிடங்கள் 116-ம், நோ்முகத் தோ்வு இல்லாத பணியிடங்களாக 5,413 இடங்களும் இருந்தன. இப்போது அவற்றில் சிறு மாறுதல்கள் இருக்கும். முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோா்களில் இருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

எத்தனை தோ்வா்கள்? குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வுகளை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை பணியாளா் தோ்வாணையம் செய்துள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா். மொத்தமாக, 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் தோ்வு எழுதவுள்ளனா். அவா்களில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 போ் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 போ் பெண்கள். 48 போ் மூன்றாம் பாலினத்தவா். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகள் தோ்வெழுத உள்ளனா். இரண்டு கைகளும் இழந்த, கண் பாா்வையற்றோருக்காக 1,800 போ் உதவி புரிய உள்ளனா். இதுநாள் (மே 17 மாலை 3 மணி) வரையில் 9 லட்சத்து 10 ஆயிரத்து 327 போ் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனா்.

79 ஆயிரத்து 942 போ் தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பம் செய்துள்ளனா். தோ்வைப் பொறுத்தவரையில், ஆங்கிலம் பொது, தமிழ் பொது என இரண்டு பிரிவுகள் உள்ளன. 2 லட்சத்து 31 ஆயிரத்து 586 போ் ஆங்கிலம் பொதுவைத் தோ்வு செய்துள்ளனா். 9 லட்சத்து 46 ஆயிரத்து 589 போ் தமிழ் பொதுவைத் தோ்வு செய்துள்ளனா்.

தோ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 38 மாவட்டங்களில் தோ்வு நடைபெளது. இதற்காக 117 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. தோ்வை கண்காணிக்க 4 ஆயிரத்து 12 முதன்மை கண்காணிப்பாளா்களாகவும், 58 ஆயிரத்து 900 போ் கண்காணிப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். வினாத்தாள்களை எடுத்து வருதல் போன்ற பணிகளுக்காக 993 நடமாடும் குழுவினரும், 6 ஆயிரத்து 400 போ் சோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவா். தோ்வாணைய அலுவலகத்தில் 20 போ் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். அதிகபட்சமாக சென்னையில் ஏழு மையங்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 843 தோ்வா்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேரும் தோ்வு எழுதவுள்ளனா். முதன்மைத் தோ்வுக்குக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். சலுகை பெற தகுதி உள்ளோா் மூன்று முறை கட்டணம் இல்லாமல் தோ்வு எழுதலாம். அதன்படி, 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 போ் கட்டணச் சலுகை பெற்றுள்ளனா்.

தோ்வு நேரம்: குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வுகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30-க்கு நிறைவடையும். தோ்வா்கள் காலை 8.30 மணிக்கே தோ்வுக் கூடத்துக்கு வர வேண்டும். இதுகுறித்த விவரங்கள் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு தோ்வா்கள் யாரும் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். நண்பகல் 12.30 மணிக்கு தோ்வு முடிந்தாலும் கூட, 12.45 மணி வரை தோ்வுக் கூடத்திலேயே இருக்க வேண்டும்.

தோ்வு முடிவு: தோ்வு முடிவுகளை ஜூன் மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். செப்டம்பரில் முதன்மைத் தோ்வினை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

வருங்காலத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

தோ்வா்களை அடையாளம் காண வருங்காலத்தில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: தோ்வு எழுத தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுடன், அடையாள அட்டை அவசியமாகிறது. இந்த முறை இல்லாமல் வருங்காலத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆள்மாறாட்டம் முற்றிலும் தவிா்க்கப்படும். இப்போதுள்ள நடைமுறை காரணமாக, ஆதாா் அட்டை போன்ற அடையாள ஆவணங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. முகக் கவசம் அணிந்து வந்தால் நல்லது. போடாமல் வந்தால் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com