தாயின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முடிந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
தாயாரின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
தாயாரின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் சட்டப்போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பேரறிவாளனின் 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். கொலையாளிகளுக்கு இரு பேட்டரிகளை வாங்கி கொடுத்தற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகளாக சிறையை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தாா். 

இந்நிலையில், நீதிமன்றத்தால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

இதற்கிடையே பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னா், மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பரோல், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பேரறிவாளன், ஒரு முறை கூட பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தாயார் அற்புதம்மாள்
பேரறிவாளனை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான சட்டப் போராட்டத்தை அவரது தாயாா் அற்புதம்மாள் நடத்தி வந்தார். தாயார் அற்புதம்மாளின் சட்டப்போராட்டத்தை வெறும் சட்டப்போராட்டமாக மட்டும் பார்த்துவிட முடியாது. ஒரே மகன் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலிருக்கும் வலியோடு ஒரு தாயாக ஒரு மிகப்பெரிய வழக்கிலிருந்து மகனை விடுதலை செய்ய வேண்டும் என்ற நெஞ்சுரத்தோடு நடத்திய போராட்டம்.

1991ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம்தான், இன்று உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளிக்கும் வரை கொண்டு வந்திருக்கிறது.

அதுவும் தனது முதுமையையும் தாண்டி அவர் ஓரிடத்தில் கூட இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் குறைக்காமல், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தனது மகனை சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலிருந்து வெளியே கொண்டு வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் நிச்சயம் அவரால் மட்டுமே முடியும், முடிந்தது என்று சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லிவிடலாம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சியினரும், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன. தமிழகத்தை ஆளும் திமுக அரசும், பேரறிவாளனை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அது தாமதப்படுத்தப்பட்ட நிலையில், பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாநில அரசின் தீர்மானத்தை ஆளுநர் இறுதியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதற்கும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கவும் சரியாக இருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

இறுதியாக இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com