துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

துறையூர் வட்டாட்சியர் அலுவலக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடத்தை வருவாய் துறையினர் வியாழக்கிழமை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு
துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

துறையூர்: துறையூர் வட்டாட்சியர் அலுவலக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடத்தை வருவாய் துறையினர் வியாழக்கிழமை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் பல்வேறு அரசு அலுவலகங்களும் அதிகாரிகள் மனமகிழ் மன்றம் ஒன்றும் செயல்பட்டன. இதில் 204 சதுரமீட்டரில் அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடமும், 484 சதுரமீட்டரில் டென்னிஸ் விளையாட்டு மைதானமும் அமைந்திருந்தது. மன்றக் கட்டடத்தின் முகப்பில் தோற்றம் 1938 எனவும், பதிவு 1975 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்குள்ள அரசு அலுவலர்கள் பெரும்பான்மையாகவும், நகரின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் அரசு வருவாய் ஆவணங்களில் அதிகாரிகள் மனமகிழ் மன்றத்திற்கான அடிமனை மற்றும் விளையாட்டுத் திடல் அமைந்துள்ள நிலம் வட்டாட்சியர் அலுவலகம் என்று காணப்பட்டது. 

எனவே, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மனமகிழ் மன்றத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) அதனை முறைப்படி மீட்க துறையூர் வட்டாட்சியர் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மன்ற நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

துறையூர் வட்டாட்சியர் அலுவலக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் டென்னிஸ் விளையாட்டு மைதான கட்டடத்தை வருவாய் துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் இடித்தனர்.

அதில், வழங்கப்பட்ட உத்திரவின் பேரில் துறையூர் வட்டாட்சியர் முறையாக விசாரணை செய்த பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவை எதிர்த்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மன்ற நிர்வாகிகள் மேல் முறையீடு செய்தனர். ஆயினும் ஆக்கிரமிப்பு நிலம் மன்றத்துக்கு சொந்தமானது என்று காட்ட சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களைத் தவிர உரிமையை தருகிற ஆவணங்கள் எதையும் மன்ற நிர்வாகிகள் விசாரணையில் சமர்ப்பிக்காத நிலையில் மேல்முறையீட்டு மனுவை மாவட்ட ஆட்சியர் நிராகரித்தார்.

இதனையடுத்து ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அதற்காக மன்றத்துக்கு சொந்தமான பொருள்களை கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு மன்ற கட்டடத்தின் கதவில் புதன்கிழமை வருவாய் துறையினர் அறிவிப்பு ஒன்றை ஒட்டினர். 

தொடர்ந்து வியாழக்கிழமை வருவாய் துறையினர் காவல் துறையினர் பாதுகாப்புடன் நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தின் மூலம் ஆக்கிரமிப்புக் கட்டடடத்தை இடித்தனர். அதிலிருந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 

அதிகாரிகள் மனமகிழ் மன்றம் வட்டாட்சியர் அலுவலக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பதை அது இடிக்கப்பட்ட போது அறிந்த மக்கள் மத்தியில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com