கல்குவாரி விபத்து: 6வது நபரை 6வது நாளாக தேடும் பணி தீவிரம்

அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய 6-ஆவது நபரைத் தேடும் பணி 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்குவாரி விபத்து: 6வது நபரை 6வது நாளாக தேடும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய 6-ஆவது நபரைத் தேடும் பணி 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கற்குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஓட்டுநரை மீட்கும் பணி தொடங்கிய நிலையில், பாறைகளை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை இரவு (மே 14) பாறைகள் சரிந்து விழுந்ததில், பணியிலிருந்த இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (25), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகியோா் கற்குவியலுக்குள் சிக்கினா். மீட்புப் பணியில் பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம் ஆகிய 3 போ் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு செல்வம் இறந்தாா். ஆயன்குளம் முருகன், செல்வகுமாா் ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடைசி நபரும் 6 -ஆவது நபருமான ஓட்டுநர் ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது அவர் உடல் இருக்கும் பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 6 -ஆவது நபருமான ராஜேந்திரனை தேடும் பணி 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பாறையை வெடிவைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாறையில் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு அதில் வெடி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாறைகளை அகற்றி விட்டு உடலை மீட்கும் பணி நடைபெறும் பாறை வெடிவைத்து தகர்க்கப்பட இருப்பதால் குவாரியின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் யாரும் நுழைய கூடாது என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குவாரி அதிபர்  செல்வராஜின் திசையன்விளை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், வீட்டிற்குள் மிளகாய் பொடிகள் தூவப்பட்டுள்ளது. இதுகுறித்து  திசையன்விளை போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com