பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், விலைக் குறைப்பு தொடா்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது ட்விட்டா் பதிவுகளில் வெளியிட்டாா். 

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைந்துள்ளது.

மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூா் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என  நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது: 
2014 முதல் 2021 வரை மத்திய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இறுதியாக செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

2021 நவம்பரில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி இருந்தும், தமிழ்நாட்டு மக்களின் சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2021 ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்த வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு.  2006-11 ஆட்சிக் காலத்திலும் சாமானிய மக்களின் நலனுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தது திமுக அரசு தான். 

மேலும், கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், மாநிலங்களுக்கான வருமானத்தில் எந்த அதிகரிப்பு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைத்தது.

01.08.2014 அன்று மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 9.48 , டீசல் லிட்டருக்கு 3.57 ஆக இருந்தது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பதற்கு முன்பு, பெட்ரோல் மீதான மத்திய அரசின் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்பட பெட்ரோல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 32.90 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருந்தது. இது லிட்டருக்கு ரூ.2 ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.27.90 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 21.80 ஆக இருந்தது.

தற்போது, மேலும் குறைக்கப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.19.90 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.15.80 ஆக மத்திய அரசு வரிகளை குறைத்தாலும், 2014 ஆம் ஆண்டை விட, மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10.42 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.12.23 அதிகமாகவே உள்ளன. எனவே, மத்திய அரசு தனது வரியை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான வரியை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசு, தற்போது சிறிதளவு மட்டுமே குறைத்துள்ளது. மேலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை கலால் வரியை உயர்த்தியபோதும், மத்திய அரசு ஒருபோதும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமலேயே பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தியது. 

மேலும், தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியை குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், எதிர்பார்ப்பதும் நியாயமே இல்லை.

மேலும், 2014 ஆம் ஆண்டு வரி விகிதங்களுடன் ஒப்பிடுகையில் வரிகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com