
விபத்துக்குள்ளான கார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே புளியமரத்தின் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). அங்குள்ள ஐடி நிறுவனத்தில்(இன்போடெக்) மேலாளராக பணியாற்றி வந்த இவர், தனது மனைவி லட்சுமிபிரியா(35), தாய் மஞ்சுளா(62), குழந்தைகள் மித்ரா(13), யாஷினி(8) ஆகியோருடன் ராமேஸ்வரம் சென்று விட்டு, திங்கள்கிழமை காலை , காரில் ஊர் திரும்பியுள்ளார்.
காரை கார்த்திகேயன் ஓட்டியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணியளவில், அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமம் அருகே தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், லட்சுமிபிரியா, மஞ்சுளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கீழப்பழுவூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, 3 பேரின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கும், இடிப்பாடுகளில் சிக்கியிருந்த குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகியோர் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
இதில் யாஷினிக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிந்தார். மித்ராவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.