
மேட்டூர் அணையில் 117 அடியை தொட்டுத் தளும்பிய நிலையில் காட்சி அளிக்கும் தண்ணீர்.
சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும்.
காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 406.99 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படுகிறது.
இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 331.28 டி.எம்.சி.யும், வடகிழக்குப் பருவ மழை மூலம் 75.72 டி.எம்.சி. பூர்த்தி செய்யப்படும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையும் படிக்க.. விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்
கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது இதுவே முதல்முறையாகும்.
முதல்வர் தண்ணீரை திறந்து விட்டார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணி அளவில் மதகுகளை இயக்கி குறுவை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க.. சிங்கத்திடம் சேட்டை: விடியோவை வைரலாக்க நினைத்த ஊழியருக்கு நேர்ந்த கதி?
நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.
நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது.
குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125. 68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை அணையிலிருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும் போது அணை மின் நிலையத்தில் இருந்து 50 மெகா வாட், சுரங்க மின் நிலையங்களில் 200 மெகாவாட், 7 கதவணைகளில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...