திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. 
கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.
கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

காரைக்கால் :  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில்  ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. திருநள்ளாறு சிவபெருமானைப் போற்றி திருஞான சம்பந்தர் நான்கு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

நள சக்கரவர்த்திக்கு தோஷ நிவர்த்தி கிடைத்த தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தலமாக இது விளங்குகிறது. இவ்வகை சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பல்வேறு  நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, உற்சவம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், நிகழாண்டு திருவிழாவுக்காக கடந்த 20-ஆம் தேதி  ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. முன்னதாக, சார்பு கோயில்களான ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில்களில் உத்ஸவ வழிபாடுகள் நடத்தப்பட்டன.
  
முறைப்படி உற்சவம் தொடங்கும் வகையில் வியாழக்கிழமை காலை 5.30 முதல் 8 மணிக்குள்ளாக சிறப்பு பூஜைகள் செய்து கணபதி தாளம், ரிஷபத் தாளம் மற்றும் சூர்ணிகை மந்திரத்துடன் கம்பத்தில்  ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு முன்னதாக கம்பத்தில் ஏற்றப்படும் கொடியை பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளின் வழியாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. 

தொடர்ந்து கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இக்கோயிலில் உள்ள மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு தர்பை புல் விசேஷமானது. இதையொட்டி கொடிக் கம்பத்தை சுற்றி தர்பை கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான ஸ்ரீ சொர்ணகணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சண்டிகேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா எழுந்தருளின. வீதியுலாவுக்கு முன்னர் 4 வீதிகளிலும் நவசந்தி பூஜை நடத்தப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூன் 2-ஆம் தேதி ஸ்ரீ அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், 3-ஆம் தேதி இரவு ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல், 4-ஆம் தேதி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்தவது தியாகராஜராட்டமாக  (உன்மத்த நடனம்) நடைபெறுகிறது. 5-ஆம் தேதி இரவு பூத வாகனத்தில் சுவாமி வீதியுலாவும்,  6-ஆம் தேதி யானை வாகனத்திலும்,  7-ஆம் தேதி இரவு  தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மின்சார சப்பரப் படலில் (தெருவடைச்சான்) வீதியுலாவும் நடைபெறுகிறது. 8-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கைலாச வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.  

தேரோட்டம் : முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9 -ஆம் தேதி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 சுவாமிகளுக்கென 5 தேர்கள் இடம்பெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தொடர்ந்து 10-ஆம்  தேதி ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார். 11-ஆம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.   12-ஆம் தேதி விசாக தீர்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறவுள்ளது. 13-ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com