பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்


சென்னை: பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது பாமக.  இவ்விரு தேர்தல்களையும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் எதிர்கொள்ளும் வகையில், கட்சித் தலைவர் பொறுப்பு அன்புமணி ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். 

சென்னை அருகே திருவேற்காட்டில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பாமகவின் சிறப்புக் பொதுக்குழுக் கூட்டம் ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்து பேசினார் தலைவர் ஜி.கே. மணி. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

2004-2009-ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தாா். அப்போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். வரும் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலை அன்புமணி தலைமையில் பாமக எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக எனும் கட்சியை ராமதாஸ் தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்புக்கு வர இயலாத நிலையில், வரும் தேர்தல்களில் அன்புமணி மூலம் ஆட்சியைப் பிடிக்கும் கனவை செயலாக்கத்துக்குக் கொண்டு வர திட்டமிட்டு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் திம்மாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கூறிய தகவல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது: தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையவை. ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை. அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும். பாமகவுக்கு யாரும் பொறுப்புக்காக வரவில்லை. தமிழகத்தில் நாம் கட்சியை தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. நம்முடைய கட்சி வித்தியாசமானது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நிறைய சாதனைகளை செய்துள்ளோம்.

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். நம்மால் மட்டுமே தமிழகத்தை உயா்த்த முடியும். 55 ஆண்டு காலம் தமிழகத்தை இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com