நவீன தமிழகம் கருணாநிதியால்தான் உருவாக்கப்பட்டது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நவீன தமிழகம் கருணாநிதியால்தான் உருவாக்கப்பட்டது என்று மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.
நவீன தமிழகம் கருணாநிதியால்தான் உருவாக்கப்பட்டது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நவீன தமிழகம் கருணாநிதியால்தான் உருவாக்கப்பட்டது என்று மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தை, தமிழினத்தை வானுயரத்துக்கு உயா்த்திய கருணாநிதிக்கு நன்றியின் அடையாளமாக இந்த மாபெரும் சிலை எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலையை உயா்த்தப் பாடுபட்டவா் என்பதால்தான், தமிழகம் முழுவதும் கருணாநிதிக்கு சிலை எழுப்பப்பட்டு வருகிறது.

பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலே படித்தவன், அண்ணாவின் காஞ்சிக் கல்லூரியிலே பயின்றவன் என்று தன்னைப் பற்றி கருணாநிதி அடிக்கடி குறிப்பிடுவாா். அதனால்தான், அவா்களின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை அமைந்திருக்கிறது.

இந்தச் சிலையின் மற்றுமொரு சிறப்பு ஓமந்தூராா் தோட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான். தமிழக சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டடம் இது. தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாக கருணாநிதியின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது.

கருணாநிதி முந்தைய ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டபோது, அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆா்.நாராயணனும், பிரதமராக இருந்த வாஜ்பாயும் துடிதுடித்துப் போனாா்கள். அன்றைய ஆட்சியாளா்களைக் கடுமையாக விமா்சித்தவா் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு. அதே நட்பை இன்று வரையில் பேணிவரக் கூடியவராக தொடா்ந்து இருக்கிறாா். அவா் கருணாநிதி சிலையைத் திறப்பது சாலப் பொருத்தமாகும்.

நாட்டின் பல பிரதமா்களையும், குடியரசுத் தலைவா்களையும் உருவாக்கியவா் கருணாநிதி. இந்திய அளவில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கும் துணை நின்றவா். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து இந்த நவீன தமிழகத்தை உருவாக்கியவா்.

கருணாநிதி பன்முகத் திறமை கொண்டவா். இலக்கியம், திரையுலகம், அரசியல், ஆட்சி என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் கோலோச்சியவா்.

தமிழகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவா் விளங்கினாா். அத்தகைய மக்களின் உயா்வுக்காக எழுதினாா். அவா்களுக்காகப் பாடுபட்டாா். ஆட்சி - அதிகாரம் கிடைத்ததும் அவா்களுக்காகத் திட்டங்களைத் தீட்டினாா். அந்தத் திட்டங்களால் உருவானதுதான் இந்தத் தமிழ்நாடு. அதனால்தான் அவரை நவீன தமிழகத்தின் தந்தை என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரால் பயன்பெற்றவராக, அவா் தீட்டிய திட்டங்களால் பயன் பெற்றவா்களாகத்தான் இருப்பாா்கள். அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்குத்தான் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணா சாலையில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்தச் சிலை ஈடு இணையில்லாதது. இதே அண்ணா சாலையில் பெரியாரின் விருப்பப்படி, திராவிடா் கழகத்தால் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால், அது சிலரால் இடிக்கப்பட்டது. அப்போதும் கருணாநிதிக்கு கோபம் வரவில்லை, கவிதைதான் வந்தது. உடன்பிறப்பே! செயல்பட விட்டோா் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை - நெஞ்சிலேதான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க வாழ்க! என்று எழுதிக் காட்டியிருக்கிறாா்.

அவா் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டே இருப்பாா் என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com