
ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டு, ஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் இடம் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து கடந்த 31ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கும் ஒப்பந்த பணியாளர்கள் மாலை 5 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 4 -வது நாளாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்கள் போராட்ட களத்திலேயே உணவு சமைத்துச் சாப்பிட்டனர். இதற்காகப் பெரிய அளவில் அண்டா கொண்டுவரப்பட்டு தக்காளிச் சாதம் சமைத்துச் சாப்பிட்டனர்.
இன்றும் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் 300 பணியாளர்களும் பங்கேற்றுள்ளதால் மாநகர் பகுதியில் இன்றுடன் 4 நாள்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருக்கள், சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
வீடுகளில் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக்களில் வீசி சென்று விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுவரை 280 டன் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டவுன் டிஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.