
ஜாபர் சேட் மனைவி, ராஜமாணிக்கம் மகன் சொத்துகள் முடக்கம்
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் உள்பட மூன்று பேருக்குச் சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.
ED has attached assets worth Rs. 14.23 Crore belonging to (i) Parvin Jaffar w/o M. S. Jaffar Sait, (retd-IPS), (ii) R Durgashankar S/o Rajamanickam, Former Secretary to the then CM of Tamil Nadu and (iii) T Udayakumar, Prop. of M/s Landmark Construction, Chennai under PMLA, 2002.
— ED (@dir_ed) November 9, 2022
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், 2002-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் அமலாக்கத் துறை, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காஷங்கர், லேண்ட்மார்க் கட்டுமன நிறுவனத்தின் உரிமையாளர் டி. உதயகுமார் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றியவர் எம்.எஸ். ஜாபர் சேட். இவர் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல கோடி மதிப்புள்ள நிலத்தை, ஒதுக்கீடு முறையில் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலத்தை அவர் முறைகேடாகப் பெற்றார் என்றும், அந்த நிலத்தில் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து மிகப்பெரிய கட்டடம் கட்டியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது 2011ஆம் ஆண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டிடம், வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காஷங்கர் உள்ளிட்டோரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.