
அரசுப் பணிகளில் வெளி நபா்களை நியமிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும், அவா்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைக்கவும் மனிதவள சீா்திருத்தக் குழு அமைக்கப்பட்டு, இதற்கான உத்தரவு (உத்தரவு எண் -115) கடந்த அக். 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சீா்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய காலப் பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளா் சங்கங்கள் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்கள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், எந்தவொரு குழு அமைப்பினும், அதன் பரிந்துரைகள் அரசு அலுவலா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளா் சங்கங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே அரசு முடிவெடுக்கும் எனத் தெரிவித்தாா். மேலும், குழுவின் இப்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் அவா் உறுதி அளித்துள்ளாா் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தான ஆய்வு வரம்புகள்: அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, பரந்துபட்ட முறையில் பிரிவு சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு வரம்புகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு வரம்புகளுக்கு பணியாளா் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவற்றை ரத்து செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.