டெல்டா மாவட்டங்களில் மழையில் மிதக்கும் சம்பா பயிர்கள்: விவசாயிகள் வேதனை

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழைக்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில்  ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழையில் மிதக்கிறது.
மழையில் மிதக்கும் சம்பா பயிர்கள்
மழையில் மிதக்கும் சம்பா பயிர்கள்


வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழைக்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழையில் மிதக்கிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மிதக்கிறது. 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அன்னப்பன் பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நடவு செய்து நான்கு நாள்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதப்பதாகவும், இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். 

இப்பகுதியில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டதால் வடிகால் வாய்க்கால்கள் தடைப்பட்டதாகவும், இதனால் மழை நீர் வடிய வாய்ப்பு இல்லாமல், விளைநிலையில் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த மழை தற்போது நின்றால் பாதிக்கு பாதி பயிரை காப்பாற்ற முடியும், ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் புதிதாக ரூ.15,000 செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com