சிலை கடத்தலில் விலகாத மர்மம்: பொன். மாணிக்கவேலின் கேள்விகளுக்கு பதில்? மநீம

சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்! முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேலின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கோப்பிலிருந்து...
கோப்பிலிருந்து...

சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்! முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேலின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சின் துணைத் தலைவர் ஆர். தங்கவேலு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நூற்றாண்டுகள் பழமையான, பல கோடி மதிப்பு மிக்க, தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் கடத்தப்பட்ட  வழக்குகளில் மர்மங்கள் தொடரும் நிலையில், முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் திடுக்கிட வைக்கின்றன.

உலகில் தொன்மையான சமூகம் தமிழ்ச் சமூகம். கலை, கலாச்சாரம், பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கியுள்ளனர். தமிழகக் கோயில்களில் உள்ள மிகப் பழமையான, கலைநயமிக்க சிலைகளே இதற்கு சாட்சி. சோழர் காலத்துச் சிலைகள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பழமையான சிலைகள் கோடிக்கணக்கில் மதிப்புடையவை.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களைச் சேர்ந்த ஐம்பொன் சிலைகள் மற்றும் உலோகச் சிலைகள், கற்சிலைகள் ஆகியவை திருடப்படுவது பல்லாண்டுகளாக தொடர்கதையாகிவிட்டது. பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் காட்சிப் பொருட்களாக உள்ளன.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு, தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக போலீஸாரின் பிடியில் சிக்காமல் இருந்த சிலை கடத்தல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், முன்னாள் ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் மீதே சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. அதை மறுத்து விளக்கம் அளித்துள்ள பொன்.மாணிக்கவேல், பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். சிலை கடத்தல் வழக்குகளில் நிலவும் மர்மங்களை வெளிப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?

மேலும், சில வழக்குகளுக்கு இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என்றும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிலை கடத்தல் வழக்குகளில் தக்க நடவடிக்கை எடுக்காததற்கு அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் மெத்தனம் காரணமா அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று மக்களிடம் சந்தேகங்கள் எழுகின்றன.

பல கோடி மதிப்பிலான சிலைகளைக் கடத்தியவர்களையும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். தமிழக கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து சிலைகளையும் மீட்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கறைபடிந்த காக்கிச் சட்டைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, சிலை கடத்தல் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com