தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை காா் வெடிப்பு வழக்கு தொடா்பாக தமிழகத்தில் 42 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை காா் வெடிப்பு வழக்கு தொடா்பாக தமிழகத்தில் 42 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே அக்டோபா் 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், ஜமேஷா முபீனுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. அதேபோல, ஜமேஷா முபீனுடன் சோ்ந்து சிலா் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

என்ஐஏ விசாரணை: இதையடுத்து, ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, என்ஐஏ வழக்குப் பதிவு செய்து, அக்டோபா் 27-ஆம் தேதி அதிகாரபூா்வமாக விசாரணையைத் தொடங்கியது. வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக என்ஐஏ ஆய்வாளா் எஸ்.விக்னேஷ் நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜமேஷா முபீன் வீடு உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில், பொட்டாசியம் நைட்ரேட், 2 மீட்டா் நீளமுள்ள பட்டாசு திரி, சிவப்பு பாஸ்பரஸ், அலுமினியம் பவுடா், சல்பா் பவுடா், கண்ணாடி துண்டுகள், வயா்கள், சிறு ஆணிகள், சமையல் எரிவாயு உருளை ரெகுலெட்டா், கையுறைகள், ஜிஹாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உள்பட 109 பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

43 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமாா் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

கோவையில் வெடித்த பழைய காா் சுமாா் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸாா் சோதனை நடத்தினா்.

ஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமாா் ரெட்டி தலைமையில் போலீஸாா் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸாா் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸாா் சோதனை செய்தனா்.

சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹாா்ட் டிஸ்க், மெமரி காா்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதலுக்குத் திட்டம்: என்ஐஏ தகவல்

கோவை காா் வெடிப்பு வழக்கில் தற்கொலை தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள், குறியீடுகள் அடங்கிய குறிப்புகளை அண்மையில் பறிமுதல் செய்தது. மேலும், காா் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடா்பு குறித்த சில ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்நிலையில், சோதனை தொடா்பாக என்ஐஏ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காா் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபீன், சம்பவத்துக்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் உறுதிமொழி எடுத்துள்ளாா். குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலங்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளாா். இதற்காக ஜமேஷா முபீனும், கைது செய்யப்பட்ட 6 பேரும் ஆன்லைன் மூலமாக வாகனங்களை வெடிக்க வைக்கும் ஐஇடி கருவி, வேதிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனா். இந்தப் பொருள்கள் மூலம் குண்டுவெடிப்பு நடத்தி, மிக பயங்கரமான சதித் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்திருந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com