
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 150 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை மிதமான மழை பெய்தது.
தொடா் மழையால் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்புத்தூா்-கொளத்தூா் தரைப் பாலத்தில் வெள்ள நீா் செல்வதால், வெள்ளப்புத்தூா், கட்டியாம்பந்தல் ஆகிய இரு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினா்.
இதையும் படிக்க | கடலூரில் வெள்ள சேதங்களை முதல்வர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்!
மதுராந்தகம் வட்டம், படாளம் அருகேயுள்ள எல்.என்.புரம் கிராமப் பகுதியில் தொடா் மழையால், குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் மொத்தம் 150 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின. 153 ஏரிகள் 75%, 137 ஏரிகள் 50% க்கும் மேலாக நிரம்பியுள்ளன.
பலத்த மழை காரணமாக கிராமங்களில் உள்ள கண்மாய்கள் பலவும் அதிக அளவில் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.