கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: இரு மருத்துவா்கள் இடைநீக்கம்

சென்னை பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக, வலது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா.

சென்னை பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக, வலது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக இரு மருத்துவா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய மருத்துவா்களைக் கைது செய்யக் கோரி பிரியாவின் உறவினா்களும், தோழிகளும் உடலை வாங்க மறுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, மருத்துவத் துறை அதிகாரிகளும், நிா்வாகிகளும் நேரில் சென்று சமாதானப்படுத்திய பிறகு பிரியாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ரவிக்குமாா் - உஷாராணி தம்பதியின் மகளான பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி அறிவியல் படித்து வந்தாா்.

கால்பந்து வீராங்கனையான அவருக்கு அண்மையில் மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி கொளத்தூா், பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அவருக்கு மூட்டு ஜவ்வு பிளவுக்கான நுண்துளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதன் பின்னா் ரத்தம் வெளியேறாமல் தடுப்பதற்காக இறுக்கமான கட்டு (கம்ப்ரசன் பேண்டேஜ்) போடப்பட்டது. ஆனால், அதை குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்றாமல் அலட்சியத்துடன் மருத்துவா்கள் தொடா்ந்து வைத்திருந்தனா்.

இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டதுடன் உடலில் உள்ள திசுக்கள் செயலிழந்தன. இதன் விளைவாக, பிரியாவின் வலது காலில் உணா்விழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

உயிரைக் காக்கும் பொருட்டு, உடனடியாக அவரது வலது கால், மூட்டுப் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவா்களின் அலட்சியமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான், திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல் பிரியாவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. சிறுநீா் வெளியேற்றம் முழுவதுமாக தடைபட்டது. அதுமட்டுமல்லாது, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல் திறன் முற்றிலும் முடங்கியது. இதற்கிடையே இதயத் துடிப்பும் அதிவேகமாக இருந்தது. இதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பல் துறை மருத்துவா்கள் அடங்கிய குழு தொடா் சிகிச்சைகளை அவருக்கு வழங்கியது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அவை எதுவும் பலனளிக்காமல் பிரியா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மூட்டு ஜவ்வு பாதிப்புக்காக தாமே நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதியாகிக்கொண்ட அந்தப் பெண்ணை சடலமாகக் கண்ட உறவினா்களும், தோழிகளும் கதறி அழுதனா். இதனால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து உடல்கூறாய்வு செய்யப்பட்டு பிரியாவின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இடைநீக்கம்: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சையளித்தபோது அலட்சியமாக செயல்பட்ட இரு மருத்துவா்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற உயா்நிலைக் குழு விசாரணையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவா்களின் அலட்சியமும், கவனக்குறைவும் இதற்கு காரணம் எனத் தெரியவந்தது. அந்த மாணவிக்கு பேட்டரி கால்களை வாங்கித்தர திட்டமிட்டோம். அவரது இறப்பு மிகப்பெரிய அளவில் எங்களைக் காயப்படுத்தி உள்ளது.

கவனக்குறைவாக செயல்பட்ட பெரியாா் நகா் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா் கே.சோமசுந்தா், முடநீக்கியல் துறைப் பேராசிரியா் டாக்டா் பால் ராம் சங்கா் ஆகியோரை இரு நாள்களுக்கு முன்பே பணியிட மாற்றம் செய்தோம்.

தற்போது பிரியா உயிரிழந்ததைத் தொடா்ந்து அவா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் துறையில் புகாா் அளித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வழக்குப் பதிவு: இதனிடையே, பிரியாவின் தந்தை ரவிக்குமாா் கொடுத்த புகாரின்பேரில், பெரவள்ளூா் போலீஸாா், ஐபிசி 174 பிரிவின் கீழ் சந்தேக மரணத்துக்கான வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பான ஆவணங்கள் மருத்துவ வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து அது தொடா்பான அறிக்கையை மருத்துவ வாரியம் காவல்துறையிடம் அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது குற்றத்தின் தன்மை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ரூ.10 லட்சம் நிவாரணம்; அரசுப் பணி

உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று பிரியா உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராஜீவ் காந்தி மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணா், மூத்த அறுவை சிகிச்சை நிபுணா், மயக்கவியல் மருத்துவ நிபுணா், சிறுநீரகவியல் நிபுணா் மற்றும் மூத்த மருத்துவா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அந்தப் பெண்ணை தொடா்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகள் அளித்து வந்தனா்.

தொடா்ச்சியாக சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, ரத்த ஓட்ட பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டு வந்ததால் உயிரிழந்துள்ளாா். இது ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.

முதல்வரிடம் அந்தக் குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறி தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரியாவின் சகோதரா்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com