காா் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸாா் சோதனை

கோயம்புத்தூா் காா் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸாா் சோதனை செய்து, பென்டிரைவ்,மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
காா் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸாா் சோதனை

கோயம்புத்தூா் காா் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸாா் சோதனை செய்து, பென்டிரைவ்,மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும்,ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா். இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸாா் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

இச் சோதனை சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு, வேப்பேரி ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு, ஏழு கிணறு பகுதியில் பிடாரியாா் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தாா் (33) வீடு,வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள்,ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

திருச்சியில்...: கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில், இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி, கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமாா் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிா்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com