யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்!

கையேந்தி யாசகம் பெற்று ஜீவனம் செய்துவரும் ஒரு முதியவர் தனக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். 
யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் பூல்பாண்டி.
யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் பூல்பாண்டி.

நாமக்கல்: கையேந்தி யாசகம் பெற்று ஜீவனம் செய்துவரும் ஒரு முதியவர் தனக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (72). கையேந்தி யாசகம் பெறும் இவர், கடந்த 1980 ஆம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் வசித்தார். அங்கு சலவைத் தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

தனது மூன்று பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழு நேர யாசகரானார். மும்பையில் மரக்கன்று நடுவது, யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும், தான் யாசகம் பெற்ற நிவாரண பணத்தை கரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம், முதல்வர் நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தான் கையேந்தி யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். 

அப்போது அவர் கூறுகையில், 'கையேந்தி யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். தவிர பள்ளிகளுக்கும் நன்கொண்டை வழங்கி வருகிறேன். தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குவற்தகாக வந்துள்ளேன். 

வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு பணம் இருந்தால் போதும். மீதமுள்ள பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம்? மிகவும் சிரமப்பட்ட காலத்தில் குடும்பம் நடத்துவதற்காக யாசகம் பெற்றேன். தற்போது எனக்காகவும், சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் யாசகம் பெற்று அதை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன்' என்றார். 

பின்னர் தான் கொண்டு வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் வழங்கினார். அவர், பணமாக பெற்றுக் கொள்ள மாட்டோம், நேரடியாக வங்கியில் சென்று செலுத்துமாறு தெரிவித்து விட்டார். 

இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வங்கியில் அவர் பணத்தை செலுத்தி அதற்கான ரசீதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com