நீதித்துறை மனசாட்சியைத் திருப்திப்படுத்த.. நீதிமன்றத்தில்  சுவாதி ஆஜர்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுவாதி ஆஜர்
கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுவாதி ஆஜர்

நீதித்துறை மனசாட்சியை திருப்திபடுத்த சுவாதியை விசாரிக்க விரும்புவதாக நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன், சுவாதி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டம், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கொலை தொடா்பாக 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கா் உள்ளிட்ட 5 போ் விடுதலை செய்யப்பட்டனா். ஆயுள் சிறைத் தண்டைனையை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

கோகுல்ராஜின் தாய் சித்ரா இந்த வழக்கில் சங்கா் உள்ளிட்ட 5 பேரின் விடுதலையை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தொடக்கக் காலத்தில் சுவாதி முக்கிய சாட்சியாக இருந்தாா் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் பிறரது வாக்குமூலங்களைப் பெற்ற போது, இடையில் ஏதோ நடைபெற்றதாக சந்தேகம் எழுகிறது. நீதித் துறையின் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் வகையில், சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க நீதிமன்றம் விரும்புகிறது. இது கட்டாயம், தேவையான ஒன்று.

எனவே, சுவாதி, அவரது குடும்பத்தினருக்கு, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளவோ கூடாது. சுவாதி பயமின்றி நீதிமன்றத்துக்கு வருவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சுவாதியை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அறையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில், சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com