அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் இபிஎஸ்: அமைச்சர்

அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் இபிஎஸ்: அமைச்சர்

அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கால்நடை பராமரிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “எடுத்தோம், கவிழ்த்தோம்” என்று உண்மைக்கு புறம்பாக பல கட்டுக்கதைகளை அறிக்கையாக அவிழ்த்து விட்டுள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படக்கூடாது எனும் கொள்கையுடன் முதல்வர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு கால்நடைகளின் உடல்நலம் பேணுதலில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 

ஆனால் மத்திய அரசிடமிருந்து கடந்த செப்டம்பர் 2020-ல் பெறப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகளைக் கூற பெறாமல் கோட்டை விட்டதுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. ஆனால் தமிழக முதல்வர் ஆட்சிப்பொறுப்பற்ற உடன் மத்திய அரசுக்கு தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமும், அழுத்தம் கொடுத்ததன் விளைவாக செப்டம்பர் 2021-முதல்  ஜுன் 2022 வரை  நான்கு தவணைகளாக  87 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு- கால்நடைகளுக்கு தடுப்பூசித் திட்டம் திறமையாக நடத்தப்பட்டது திமுக ஆட்சியில்தான் என்பதை எதிர்கட்சி தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 

இந்த வருடம் மேற்கொள்ள வேண்டிய  தடுப்பூசி பணிகளுக்கும் முன்கூட்டியே- கடந்த ஜுன்-2022, ஜுலை-2022, ஆகஸ்ட்-2022 ஆகிய மாதங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மூலமாகவும், செப்டம்பர்-2022-ல் தலைமைச் செயலர் மூலமாகவும் மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டு- அந்த 90 இலட்சம் தடுப்பூசிகளையும் டிசம்பர் 2022-க்குள் வழங்கி விடுவதாக மத்திய அரசு 24.11.2022 அன்று உறுதியளித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கோமாரி நோயின் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அவசர தேவைகளுக்கு என சுமார் ஐந்து இலட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக- பருவமழை காலத்தில் ஏற்படும் நோய்த்தாக்கத்தை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் திரித்து அறிக்கை வெளியிடும் முன்பு உண்மை நிலையை சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும். கால்நடைகள் மேல் தமிழக முதல்வருக்கு இருக்கும் அக்கறையின் காரணமாக கால்நடை வளர்ப்போரின் இருப்பிடங்களுக்கே சென்று- அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து  245  நடமாடும் கால்நடை மருத்துவ அலகுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, உண்மைகள் இவ்வாறு இருக்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தனது கற்பனையில் உதித்த பல கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியில் கால்நடைகளின் நலனை பேணி பாதுகாத்து, அதன் மூலம் கிராமப்புறங்களின் பொருளாதாரத்தின் அடிநாதமாக கால்நடை பராமரிப்புத்துறை புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. 

இது தவிர இன்னும் பல திட்டங்களை கால்நடை வளர்ப்போருக்காக வகுத்து செயல்படுத்தவும் தமிழக முதல்வரின் தலைமையிலான திமுக ஆட்சி உறுதிபூண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொண்டு- பொய்யுரைகளும், புனைவு கதைகளும் தமிழக மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து- அதிமுகவிற்குள் நடக்கும் உள்கட்சி குழப்பத்திற்கு திரை போட்டு மறைக்க இப்படி கட்டுக்கதைகளை- கற்பனை குற்றச்சாட்டுகளை- அடிப்படை ஆதாரமின்றி “அறிக்கை” என்ற பெயரில் விட வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com