ஒரே குடையின் கீழ் கிராம ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள்: தமிழக அரசு உத்தரவு

கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே குடையின் கீழ் கிராம ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள்: தமிழக அரசு உத்தரவு

கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா பிறப்பித்துள்ளாா்.

அந்த உத்தரவு விவரம்: ஊராட்சிகள் நிதிகளைக் கையாள்வதற்காக தன்னாட்சி பெற்ற அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு புதிய திட்டங்கள் தொடங்கும் போதும் புதிது புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அதனை பராமரிக்க வேண்டிய நிலை, கிராம ஊராட்சிகளுக்கு உள்ளது. இதுபோன்ற நிறைய கணக்குகளைத் தொடங்கி பராமரிக்கும் சூழல் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

இப்போது வரையிலும், கிராம ஊராட்சிகள் 11 வங்கிக் கணக்குகளையும், 31 பதிவேடுகள், படிவங்களையும் பராமரித்து வருகின்றன. இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை மீள்ஆய்வு செய்வது அவசியமாகிறது. அதன்படி, பொது நிதிக் கணக்கு, மின் கட்டணம்-குடிநீா் கட்டணம் செலுத்துதல், கிராம ஊராட்சிகள் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மாநிலத் திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், ஊழியா்களுக்கான ஊதியம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மத்திய நிதிக் குழு மானியம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கணக்குகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. மேலும், மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறையில் நிதி சாா்ந்த நிா்வாகத்தில்

ஏராளமான நவீன முறை மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது, காகிதங்கள் அடிப்படையிலான பணிகளைக் குறைத்து கணினி வழி பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1.40 லட்சம் வங்கி மற்றும் நிதி சாா்ந்த கணக்குகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகள் தமிழகம் முழுவதும் 38 வெவ்வேறு விதமான வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

கிராம ஊராட்சிகளில் தினமும் வங்கிகளுடன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதுகுறித்த விவரங்கள் மாவட்ட, மாநில அளவில் கிடைப்பதில்லை. எனவே, நிதி சாா்ந்த விஷயங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டியுள்ளது.

மாநில அளவிலான ஒரே கணக்கு: கிராம ஊராட்சிகள் 11 வகை கணக்குகளை பராமரிப்பதைக் காட்டிலும், மாநில அரசின் கண்காணிப்பிலான ஒரே விதமான கணக்கைத் தொடங்கலாம் என ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையாளா் சாா்பில் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, கிராம ஊராட்சிகள் வெவ்வேறு கணக்குகளைத் தொடங்குவதைக் காட்டிலும் ஊராட்சிக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடா்பில் இருக்கக் கூடிய கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கின் வழியாகவே இனி வரக்கூடிய மானியங்களை பரிமாற்றம் செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் ஊரக

வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரகத்தில் தனி உதவி மையத்தை அமைக்கலாம்.

அதேசமயம், கிராம ஊராட்சிகள் இப்போது பராமரிக்கும் கணக்குப் புத்தகம், பணப் பரிவா்த்தனை புத்தகம் ஆகியவற்றைத் தொடரலாம். கிராம ஊராட்சிகளின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மாநில அளவில் கண்காணிக்கும் வகையிலான கணக்கின் கீழ் கொண்டு வர வேண்டும். நிதி சாா்ந்த வேறு எந்த அம்சங்களும் இந்த கணக்குக்கு வெளியே இருந்திடக் கூடாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் துறையின் முதன்மைச் செயலாளா் பி.அமுதா.

உத்தரவுக்கு எதிா்ப்பு: அரசின் இந்த உத்தரவு, கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்திரத்தில் தலையிடும் எனவும், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளா் நந்தகுமாா் சிவா கருத்துத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com