கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின்
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின்


அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு பெருமைகளுக்கு உரிய மாவட்டம் அரியலூர். அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம்! கொள்ளிடத்திற்கு வடக்கே - வெண்ணாற்றுக்கு தெற்கே - ஊடாற்றுக்கு வடக்கே - சிதம்பரத்துக்கு மேற்கே – இந்த அரியலூர் உருவாக்கப்பட்டது.

கங்கையை வென்ற முதலாம் இராசேந்திர சோழன் இங்கே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினான். தனது ஆட்சிக் காலத்தில் தலைநகரைத் தஞ்சையில் இருந்து இந்த சோழபுரத்துக்கு மாற்றினான்.

தமிழ்காக்க - தமிழர்தம் நலம் காக்க, டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றிக் கல்லக்குடி என்று பெயர் சூட்டுவதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து, கல்லக்குடி கொண்டானாகப் படுத்து – தமிழ்க்குடி தொண்டனாக எழுந்த நமது கலைஞரைத் தலைவராக எழ வைத்த மாவட்டம்தான் இந்த அரியலூர் மாவட்டம்.

கலிங்கச் சிற்பங்கள், மாளிகை மேடு, யானை சுதை சிற்பம்,   இரட்டைக் கோயில் என்று எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் - பொக்கிஷங்கள்!

கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இது. சுண்ணாம்புக் கல், மணற்கற்கள், பாஸ்பேட் முண்டுகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமங்கள் நிறைந்த பகுதிகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் சொரிந்த பகுதியாக விளங்குகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெறும் புதைபடிவங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரணவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 10 கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா (Fossil Park) அமைப்பதற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றது.

வாரணவாசி கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் நிலப்பகுதியினைப் (களர் நிலப்பரப்பு) பாதுகாத்திட, பாதுகாப்புக் கொள்கை (Conservation Policy) வெளியிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம்.

நேற்று கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு அந்த பணிகளை எல்லாம் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டோம்.  கங்கைகொண்ட சோழன், மும்முடிச் சோழன், உத்தமச் சோழன், பண்டிதச் சோழன், வீரசோழன் போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சோழ மாமன்னர் இராஜேந்திர சோழன். தெற்காசிய நாடுகளை வென்று, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர். தனது ஆட்சிக் காலத்தில் பல நாடுகளைக் கடல் கடந்து சென்று வென்றதோடு, கிழக்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தவர். 

இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் நேற்று பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை அறிவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
 

மேலும், தமிழகத்தில் போட்டி போட்டுக் கொண்டு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருகின்றன. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மாவட்டத்தில் ரூ.30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற
திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய
திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி
மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com