சிவாஜி சிலைகளும் சிக்கல்களும்...!

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பிரிக்க முடியாதது எதுவோ என்ற தருமியின் கேள்விக்கான பதிலைப் போன்று தமிழகத்தில் சிலையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே உள்ளன.
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலை.
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலை.

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பிரிக்க முடியாதது எதுவோ என்ற தருமியின் கேள்விக்கான பதிலைப் போன்று தமிழகத்தில் சிலையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே உள்ளன.

அந்தப் படத்தின் நாயகனான சிவாஜிக்கு திருச்சியில் நிறுவப்பட்ட சிலையும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சிலை 11 ஆண்டுகளைக் கடந்தும் திறக்கப்படாமலேயே உள்ளது.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிவாஜி கணேசன் எனும் பெயர் தவிர்க்க முடியாதது. 1928-இல் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த அவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம். 7 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து, பின்னர் திரையுலகில் அறிமுகமாகி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், நயாகரா மாநகரத்தின் ஒருநாள் மேயராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கலைமாமணி, பத்ம பூஷண், பத்ம விபூஷண், செவாலியே, தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இத்தகைய சிறப்பு மிக்கவரின் நினைவாக 2006-ஆம் ஆண்டு புதுச்சேரியிலும், 2008-ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும், 2009-இல் மதுரையிலும் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்ட சிலை பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. 2001, ஜூலை 21-இல் சிவாஜி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், சிவாஜிக்கு மணிமண்டபமும் சிலையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ரசிகர்களால் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2002-ஆம் ஆண்டு சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரே பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை மணிமண்டபத்துக்காக ஒதுக்கினார் ஜெயலலிதா. பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் இந்த இடம் ஒப்படைக்கப்பட்டு, ரூ. 2.8 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017-இல் திறக்கப்பட்டது.

2006-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிவாஜிக்கு சிலை வைப்பது என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி, ஜூலை 21-இல் கடற்கரைச் சாலையில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சிலை திறக்கப்பட்டது. அப்போதே இந்தச் சிலையைத் திறக்க எதிர்ப்பு  தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2013-ஆம் ஆண்டு போக்குவரத்துக் காவல் துறையின் கருத்தைக் கேட்டது நீதிமன்றம். போக்குவரத்து சிக்னலை சிவாஜி சிலை மறைக்கிறது; எனவே, அதை அகற்றலாம் என தமிழக அரசும் பதில் அளித்தது.

இதையேற்று, 2014-இல் சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு சார்பில் ஓராண்டு அவகாசம் கோரப்பட்டது. 

இந்நிலையில், பலகட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2017, ஆக. 2-ஆம் தேதி இரவோடு இரவாக சிவாஜி சிலை மணிமண்டபத்துக்கு மாற்றப்பட்டது. சிலை அகற்றம் தொடர்பாக அரசியல், திரையுலக மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரைச் சாலையிலேயே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றுவரை நிலுவையிலேயே உள்ளது.

திருச்சியில்... திருச்சியிலும் 11 ஆண்டுகளாக சிவாஜி சிலை திறக்கப்படாமலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இந்தச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. 

2011-இல் சிலை திறப்பு விழாவுக்குத் தயாரான தருணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் துணியால் மூடப்பட்ட சிலை இன்று வரை திறக்கப்படாமலேயே உள்ளது. அரசியல், நீதிமன்ற வழக்கால் சிலை திறக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சிவாஜி ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தச் சிலையைத் திறக்க சிவாஜியின் மூத்த மகனும், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவருமான ராம்குமார், மன்ற துணைத் தலைவர் டி. சீனிவாசன், பொதுச் செயலர் சி.எஸ். குமார் மற்றும் சிவாஜி ரசிகர்கள் சார்பில் தமிழக முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோரிக்கை மனு வழங்கியபடியே உள்ளனர். ஆனால், சிலையைத்தான் திறந்தபாடில்லை.

திருச்சி மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சிலையைத் திறக்கக் கோரிக்கை எழுந்தபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக மேயர் மு. அன்பழகன் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிலையைத் திறக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப் பின்புலமாக இருந்த சிவாஜி ரசிகரான திருச்சி எம். சீனிவாசன் கூறியது:

2018-ஆம் ஆண்டு நான் அரசுப் பணியில் இருந்ததால் எனது நண்பரான மோகன் பாலாஜியின் பெயரில் மனு தாக்கல் செய்தேன். 4 ஆண்டுகள் ஆகிவிட்டன; நானும் ஓய்வு பெற்றுவிட்டேன். சாலைகளில் சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத் தடை உத்தரவு இருப்பதாகக் கூறுகின்றனர். அந்தத் தடை உத்தரவு 2012-இல் வந்தது. ஆனால், 2011-இல் திருச்சியில் சிலை வைக்கப்பட்டுவிட்டது.

மேலும், திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலையைத் திறக்கக் கூடாது என யாரும் தடையாக நிற்கவில்லை. திறக்கக் கோரியே வழக்கு உள்ளது. அரசே சிலையைத் திறந்தால் அடுத்த நாளே நீதிமன்றத்தில் உள்ள எங்களது மனுவை திரும்பப் பெற்று விடுவோம் என்றார்.

திருச்சி சிவாஜி பிலிம் கிளப் தலைவர் எஸ். அண்ணாதுரை கூறுகையில், சென்னையில் உள்ள மணிமண்டபத்தின் வெளிப்புறம் சிவாஜியின் முழு உருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அக். 1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். சிவாஜியின் 94-ஆவது பிறந்த நாளில் நடைபெறும் இந்த விழாவிலேயே, திருச்சியில் மூடப்பட்டுள்ள சிலையைத் திறப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இந்தச் சிலையை திறக்காமல் மூடி வைத்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்க முயற்சி செய்யவில்லை. விரைந்து திறக்காவிட்டால் சிவாஜி பிறந்த தினமான அக். 1-ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் நானே முன்னின்று சிவாஜி சிலையைத் திறப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசியல் மட்டத்தில் திருச்சி சிவாஜி சிலை திறப்பு நிகழ்வானது மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com