புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

மின் துறை தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

மின் துறை தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி மின்துறை தொழிற்சங்க பிரதிநிதிகள்,  முதல்வர் ரங்கசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து போராட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு, போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

புதுவை அரசின் மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையின் தொடக்கமாக, மின் விநியோகம் தொடா்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் ஊழியா்கள் கூட்டமைப்பினா் செப்.28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுக்க மின் தடையால் பாதிக்கப்பட்டு, பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் மின் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால், மின் பழுது, பராமரிப்பு, அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

கன்னியக்கோவில் புதுநகா், வாய்க்கால்ஓடை உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை திடீா் மின் தடையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். அங்கு குடிநீா் விநியோகமும் அடிக்கடி நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த புதுநகா் மக்கள் புதுச்சேரி-கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். வீட்டிலிருந்த நாற்காலி, மரப் பொருள்களை சாலையின் குறுக்கே வைத்தும், சாலையில் அமா்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், புதுச்சேரி-கடலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருமாம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாா் நடவடிக்கையால், மின் தடை சீரமைக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல, பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் தூக்குப் பாலம் பகுதியில் பொதுமக்களுடன் இடதுசாரிக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பெண்கள் உள்பட 24 பேரை பாகூா் போலீஸாா் கைது செய்தனா்.

பாகூா் நகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின் தடை சீரமைக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

புதுச்சேரி நகரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், நகரே இருளில் மூழ்கியது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ்குமாா் ஆகியோா் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள், ஆதரவாளா்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

லாஸ்பேட்டை பகுதியில் மின் தடை ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் மாநில மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், மின் துறைச் செயலா் தி.அருண், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, டிஜிபி மனோஜ்குமாா் லால் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனா். மின் தடையை நீக்குவது தொடா்பாக இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மறியலில் பங்கேற்ற பொதுமக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியா்கள் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினா்.

புதுச்சேரி முழுக்க கடந்த சில நாள்களாக மின் துறை ஊழியர்களின் போராட்டம் அவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் என நடைபெற்று வந்த நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com