சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: ஈஸ்வரன் நடைப்பயணம்!

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணத்தை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: ஈஸ்வரன் நடைப்பயணம்!

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணத்தை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். 

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 38 கிலோமீட்டர் இடைவெளியில் நான்கு வழி சாலைகள் இரண்டு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளும் தொடர்கதையாக உள்ளன. 

இந்த நிலையில் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக நான்கு வழி சாலையாக மாற்ற வலியுறுத்தி கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மூன்று நாள் நடைப்பயணம் நடைபெறுகிறது.

இந்த நடைப் பயணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சேலத்தில் தொடங்கி வைத்தார். 

இந்த நடைப்பயண தொடக்க விழாவில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் இரு வழி சாலையாக இருக்கின்ற காரணத்தால் விபத்துகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதாகவும், இந்த சாலையை முழுமையாக நான்கு வழி சாலையாக மாற்ற வலியுறுத்தி பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை மெத்தனப்போக்கு கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார். 

மத்திய அரசு நினைத்தால் இந்த சாலையை முழுமையாக நான்கு வழி சாலையாக மாற்றும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உடனடியாக ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடலாம். ஆனால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த சாலையை முழுமையாக நான்கு வழி சாலையாக மாற்றிட புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய ஈஸ்வரன் ஏற்கனவே நிலம் வழங்கியவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தாமதமின்றி உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நான்கு வழி சாலை அமைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com