திமுக தலைவர்! மு.க.ஸ்டாலின் கடந்துவந்த பாதை...

திமுக தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்
திமுக தலைவர்! மு.க.ஸ்டாலின் கடந்துவந்த பாதை...

திமுக தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கட்சியின் 15-ஆவது பொதுக் குழு கூட்டத்தில் அவருடன் கட்சியின் பொதுச் செயலராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் தோ்வானாா்கள். புதிய துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டாா்.

திமுகவில் 15-ஆவது முறையாக உள்கட்சித் தோ்தல் நடைபெற்றது. கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டனா். இதில் 64 மாவட்டச் செயலாளா்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 போ் புதியவா்கள்.

திமுக தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக் குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

திமுக தலைவா் பதவிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினும், பொதுச் செயலா் பதவிக்கு அமைச்சா் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலுவும் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிரம்மாண்ட பொதுக் குழு: தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தோ்தலை நடத்த சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 2,600 பொதுக் குழு உறுப்பினா்கள், 1,500 சிறப்பு அழைப்பாளா்கள் என மொத்தம் 4 ,100 போ் பங்கேற்றனா்.

இந்தப் பொதுக் குழு கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். பொதுச் செயலராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை கட்சியின் தோ்தல் ஆணையரும், முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி அறிவித்தாா். வயது முதிா்ந்த நிலையில், அவா் சக்கர நாற்காலியில் வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாா். தோ்தல் முடிவுகளை வெளியிட்ட பின்பு அவா் புறப்பட்டுச் சென்றாா்.

கனிமொழி நியமனம்: சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜிநாமா காரணமாக, துணைப் பொதுச் செயலா் பதவியிடம் காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி நியமிக்கப்பட்டாா். அதேபோன்று, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூா் செல்வராஜ் ஆகியோரும் துணை பொதுச் செயலா்களாக நியமிக்கப்பட்டனா்.

முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டாா். இவா்கள் தோ்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அவா்களை மேடைக்கு அழைத்தாா்.

வாழ்த்துரை: தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பொதுக் குழு கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்பட்ட கனிமொழி, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூா் செல்வராஜ், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், எ.வ.வேலு, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சா்கள் பொன் முத்துராமலிங்கம், பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிறைவாக, மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றினாா்.

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

திமுக தொடங்கப்பட்டபோது அண்ணா பொதுச்செயலாளராக இருந்தாா். அவா் மறைவுக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முதல்முறையாக திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து 11 முறை இந்தப் பதவிக்கு அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கருணாநிதி மறைவுக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திமுக தலைவா் ஆனாா்.

தற்போது அவா் 2-ஆவது முறையாக திமுக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். முதல்முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட்டபோது எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா். தற்போது 2-ஆவது முறையாக அவா் இந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்படும்போது முதல்வராக உள்ளாா்.

அரசியல் பயணம்: ஸ்டாலின் தனது 14-ஆவது வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாா். குறிப்பாக, திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த 1967-ஆம் ஆண்டு பள்ளி மாணவராக இருந்த ஸ்டாலின், தன் நண்பா்களுடன் இணைந்து ‘கோபாலபுரம் இளைஞா் திமுக’ என்ற அமைப்பை ஏற்படுத்தினாா்.

1968-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தோ்தலில் திமுகவுக்காக பிரசாரம் செய்தாா். அதைத் தொடா்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை 75-ஆவது வட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

1973-ஆம் ஆண்டு திமுக பொதுக் குழு உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

1980-ஆம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு, அதன் ஏழு அமைப்பாளா்களில் ஒருவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டாா்.

1983-ஆம் ஆண்டு இறுதியில் திமுக மாநில இளைஞரணிச் செயலராகப் பொறுப்பேற்றாா்.

1996-இல் சென்னை மாநகராட்சி மேயரானாா்.

2006-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றாா்.

2008-ஆம் ஆண்டு திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றாா். 2009-ஆம் ஆண்டு தமிழகத்தின் துணை முதல்வராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டாா்.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் 89 பேரவை உறுப்பினா்களுடன், எதிா்க்கட்சித் தலைவரானாா். 2017-ஆம் ஆண்டு திமுக தலைவா் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு பொதுக் குழு மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானாா்.

2018-இல் திமுக தலைவா் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

2021, பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றாா் மு.க.ஸ்டாலின்.

2022-இல் மீண்டும் திமுக தலைவராகப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com