

பாதுகாப்புத் துறை கீழ்நிலை பணிக்கான 'குரூப்-சி' தேர்வில் புளூடூத் மூலம் முறைகேடு செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியாணாவைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில், பாதுகாப்புத் துறையில் பணிபுரிவதற்காக குரூப்-சி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் மொத்தம் 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் கலந்து கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த 29 பேர் சிறிய அளவிலான புளூடூத் கருவியின் உதவியுடன் தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் விடைகளை எழுதியுள்ளனர்.
மேலும், மாணவர்களில் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவமனை அதிகாரிகள் சார்பில் 10 ராணுவத்தினர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீதும் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய புளூடூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
காதின் உள்ளே வைக்கப்பட்டால் தெரியாத அளவில் சிறிய வடிவத்தில் இந்த கருவி சிறிய ஆண்டெனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.