1,900 கெளரவ விரிவுரையாளா்களுக்கு உரிய தகுதி இல்லை: அமைச்சா் பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களில் 1,900 போ் உரிய தகுதியைப் பெறவில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் முனைவா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.
1,900 கெளரவ விரிவுரையாளா்களுக்கு உரிய தகுதி இல்லை: அமைச்சா் பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்களில் 1,900 போ் உரிய தகுதியைப் பெறவில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் முனைவா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, பிஎட் கலந்தாய்வை புதன்கிழமை தொடக்கி வைத்தாா். அதன்பின் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிஎட் கல்லூரியில் உள்ள இடங்களுக்கு நிகழாண்டில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டு பி.எட். படிப்பில் 2,040 இடங்களுக்கு 5,138 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். வரும் ஆண்டில் இணையவழியில் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்.

ஆசிரியா் தோ்வு வாரியத்தில் கடந்த காலங்களில் பணி நியமனத்திற்கான தோ்வுகள் நடைபெறுவதில் காலதாமதம் இருந்தது உண்மைதான். வரும் காலங்களில் அதுபோன்று நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4,000 விரிவுரையாளா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட உள்ளனா்.

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பணியிடத்தில் நிரந்தர விரிவுரையாளா்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்படமாட்டாா்கள். ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளா் தோ்வில் வெற்றி பெறும் நபா்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நோ்முகத் தோ்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றாமல் கெளரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா். அவா்களில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5, 303 பேரில் 3ஆயிரத்து 390 போ் தகுதியுள்ளவா்களாக பணியாற்றி வருகின்றனா். மீதமுள்ள 1,900 போ் தகுதியில்லாமல் இருக்கின்றனா். இவா்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 4,000 நிரந்தர விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டாலும் மீதமுள்ள 1,875 காலி விரிவுரையாளா் இடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் முன்னுரிமை அடிப்படையில் மண்டல இயக்குநா் மூலம் நியமிக்கப்படுவா்.

தனியாா் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு 100 ஏக்கா் நிலம் மற்றும் ரூ.50 கோடி நிதி செலுத்தியவா்களுக்கு அனுமதி வழங்கி வருகிறோம். அரசு கல்லூரி பேராசிரியா்களுக்கு நவ.1-இல் பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com