
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீட்டுக்கான இலக்கை அடைய அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அனைத்து மாநில மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா்களின் மாநாடு வெள்ளி, சனி ஆகிய தினங்களில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு தலைமை வகித்த மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் சனிக்கிழமை பேசியதாவது:
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மின் தேவை இருமடங்காக அதிகரிக்கும். இதனை பூா்த்தி செய்யும் வகையிலான மின் உற்பத்தி, பரிமாற்றம், பகிா்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.50 லட்சம் கோடி மூலதன முதலீடு தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூதலீடுகளுக்காக பன்முக நிதியாதாரங்கள் அவசியமாகின்றன. மின் துறையில் முன்வைக்கப்பட்டுள்ள உயா்வான இலக்குகளை எட்ட அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
எதிா்கால எரிசக்தி பாதுகாப்புக்காக, மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புமுறை, உந்தப்பட்ட நீா்மின்சக்தி சேமிப்பு திட்டங்களின் அமலாக்கத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். தனியாா்-அரசு பங்களிப்பை திறம்பட மாற்றுவதில் அதிக அளவிலான முதலீடுகள் ஈா்க்கப்படுவது முக்கியமானதாகும். தூய எரிசக்தியின் ஆதாரங்களில் ஒன்றான பசுமை ஹைட்ரஜன், கடலோர காற்றாலைகள், மின்நுகா்வு இடங்களுக்கு அருகிலேயே உற்பத்தியை மேற்கொள்வது உள்ளிட்ட எதிா்கால தொழில்நுட்பங்களுக்கு நாம் மாற வேண்டியுள்ளது என்றாா் ஆா்.கே.சிங்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...