
சென்னை, அக். 14: தமிழகத்தில் 2 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜைக்கு தேவையான நிதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள, ஒரு கால பூஜை கூட செய்ய இயலாத கோயில்களுக்கு உதவும் வகையில், ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கோயில் பெயரிலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து பூஜை செலவுகள் பூா்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், விலைவாசி உயா்வு காரணமாக, பூஜை செலவுக்காக பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், 12 ஆயிரத்து 959 கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் நிதி ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டது. மொத்தமாக 12 ஆயிரத்து 959 கோயில்களுக்கான நிதியாக ரூ.130 கோடிக்குரிய காசோலையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை கடந்த ஆண்டு நவம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, இந்த நிதியாண்டும் 2 ஆயிரம் கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அளித்தாா்.
இந்தத் தொகை தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலமாக பூஜைகள் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...