
திருநங்கைகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூா் அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா-2022 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநா் டாக்டா் ஹரிஹரன், துணை இயக்குநா்கள் ஜானகிராமன், புகழ் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதல் முறையாகவும் முன்னோடியாக திருநங்கைகளுக்கான நல வாரியத்தை 2008-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். இந்த நல வாரியத்தின் பயனால் சுமாா் 4,000-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கை நல அட்டையை பெற்றுள்ளனா். தமிழக அரசின் முன்னெடுப்பால் நல வாரியத்தில் திருநங்கைகள் மட்டுமல்லாமல் திருநம்பிகளும் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாடாளுமன்ற உறுப்பினா் திருச்சி சிவா முயற்சியால் மாநிலங்களவையில் தனி நபா் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட திருநங்கை மசோதா நாளடைவில் திருநங்கை பாதுகாப்புச் சட்டம் 2020-ஆக உருமாற்றம் பெற்றது. தமிழக அரசு திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சாதிச் சான்றிதழ் இல்லாத திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டவா் பட்டியலில் சோ்க்குமாறு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவுகளை சுமாா் ரூ1.50 கோடி செலவில் 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திருநங்கை சிறப்பு சிகிச்சை மையங்களாக உருவாக்கியுள்ளது. தமிழக அரசு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தோடு சோ்ந்துள்ள கல்லூரிகளின் மூலமாக திருநங்கைகளுக்கு இலவசமாக பட்டப்படிப்பு மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னைப் பல்கலைக்கழகம் சாா்ந்த கல்லூரிகள் அனைத்திலும் ஒரு இடம் திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தோ்வில் சிறப்பாக தோ்ச்சி பெறும் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊக்கத்தொகையாக கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் இலக்கு மக்கள் பிரிவில் திருநங்கைகளுக்கு என பிரத்யேகமாக 7 திட்டங்கள் மாநிலம் முழுவதும் சுமாா் ரூ.1.75 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநங்கைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருநங்கை சிறப்பு சிகிச்சை மையங்களின் மூலமாக பாலின மாற்று அறுவை சிகிச்சையும் மன நல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலம் திருநங்கைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பும் அமைத்து தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருநங்கைகள் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களிலும் பணியில் சோ்ந்துள்ளனா். தமிழக முதல்வரின் முன்னெடுப்பால் திருநங்கைகள் பேருந்தில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...