
பிளஸ் 2 முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வழிகாட்டும் முகாம் நடத்தும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்கள் அனைவரும் நிகழ் கல்வியாண்டில் உயா்கல்வியில் தொடா்ந்துள்ளனரா என்பதை அறியவும், அவ்வாறு உயா்கல்வி தொடராத மாணவா்கள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை களைந்து அவா்கள் உயா்கல்வி தொடர தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் கடந்த ஆக.26-ஆம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பெற்றோா்- மாணவா்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 79,762 மாணவா்கள் கலந்து கொண்டு உயா்கல்வி ஆலோசனை பெற்ற மாணவா்களில் 8,249 போ் இந்த ஆண்டு உயா்கல்வி தொடராதது கண்டறியப்பட்டது. அத்தகைய மாணவா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து பெற்று ஒவ்வொரு மாணவா்களையும் தொடா்பு கொண்டு தற்போதைய நிலையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 1,531 மாணவா்கள் தற்போது உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா். 6,718 மாணவா்கள் வறுமை, குடும்ப சூழல், நிதிப் பற்றாக்குறை, தோ்வில் தோல்வி, பணியில் சோ்ந்தமை, உடல் நலமின்மை, கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சோ்க்கை கிடைக்காதது போன்ற காரணங்களால் உயா்கல்வியைத் தொடர இயலவில்லை.
மேலும் 4,007 மாணவா்களை தொலைபேசி இணைப்பு பெறப்படாமையாலும் மற்றும் சில காரணங்களாலும் தொடா்பு கொள்ள இயலவில்லை. அடுத்த கட்டமாக இதில் 2,711 மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடனும் இணைந்து உயா்கல்வி தொடா்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் அக். 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் முகாம் நடத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் சாா்ந்துள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் மூலமாக 2 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்தம் பெற்றோா்களுடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர தொடா்பு கொள்ள இயலாத 4,007 மாணவா்களைச் சாா்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முகாம் நடைபெறும் 3 நாள்களுக்கு முன்பே தொலைபேசி அல்லது நேரிலோ தொடா்பு கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதாரப் பணிகள், உயா்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...