வெள்ள அபாய எச்சரிக்கை! மேட்டூர் அணை நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு சார்பில் மீண்டும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
வெள்ள அபாய எச்சரிக்கை! மேட்டூர் அணை நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 
தமிழக அரசு சார்பில் மீண்டும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,00,000 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும்  காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும்,  உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 78 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1,00,000 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் உயிர் மற்றும் உடைமைக்கு பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வர வாய்ப்புள்ளது. எனவே, அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அதனை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com